search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல் நிலையத்தில் புகார்"

    நக்கீரன் கோபால் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. #NakkeeranGopal #NirmalaDevi #BanwarilalPurohit
    சென்னை:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியுடன் தொடர்புபடுத்தி கட்டுரை வெளியிட்டதால் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது கவர்னர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து நக்கீரன் கோபால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு பிறகு கோர்ட்டு உத்தரவால் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து இணை இயக்குனர் மூலம் ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கவர்னர் மாளிகை தொடர்பாக நல்லெண்ணம் கொண்டவர்கள் தெரிவித்த பரபரப்பூட்டும் தகவல் மற்றும் கவலையின் அடிப்படையில் இந்த விளக்க அறிக்கையை வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் சிறப்பான கலாச்சாரமும் திருவள்ளூவர் முதல் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வரை தத்துவ ஞானிகள் மிகுந்த மாநிலம் ஆகும்.

    எனவே தமிழக மக்கள் உண்மையின் பக்கம் எப்போதும் நிற்பார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியானது.

    சமூக விரோத சக்திகள் சமுதாயத்தை கையில் எடுத்துக்கொள்ளும் அச்சுறுத்தல் ஏற்படும்போது உண்மையை தெரிவிக்க வேண்டிய அவசியம் கவர்னர் மாளிகைக்கு ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை கல்லூரி துணை பேராசிரியை நிர்மலாதேவியை கவர்னர் மற்றும் கவர்னர் மாளிகை அதிகாரிகளுடன் தொடர்புபடுத்தி கூறப்படுவது முழுக்க முழுக்க பொய்யானது.

    போலீசில் அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் உண்மையை வெளியில் கொண்டு வரும். இந்த நிலையில் மாநிலத்தின் முதல் குடிமகனான கவர்னர் மீது தொடர்ந்து கோழைத்தனமான, அருவெறுக்கத்தக்க, பொறுத்துக் கொள்ள முடியாத அவதூறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்தே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்பதை கண்டு பொதுமக்கள் சிரிக்கிறார்கள்.

    எந்த ஒரு வி‌ஷயத்திற்கும் ஒரு எல்லை உண்டு. இந்த விவகாரத்தை பொறுத்தவரை போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    சட்டம் தன் கடமையை செய்து கொண்டு இருக்கும் நிலையில் கடந்த 6 மாதமாக கவர்னரை பற்றி அவதூறு வெளியிடப்பட்டது. என்றாலும் கண்ணியம் கருதி கடந்த 6 மாதமாக கவர்னர் அமைதியாக இருந்தார்.

    இந்த நிலையில் நக்கீரன் பத்திரிகையில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளிவந்த இதழில் விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக இடம் பெற்ற தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை தந்தன. இந்த விவகாரத்தில் போலீசில் நிர்மலாதேவி என்ன வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார் என்ற உண்மையான தகவலை கட்டுரை எழுதியவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.

    அந்த கட்டுரையில் பத்திரிகை விதிமுறைகள் அனைத்தும் உச்ச அளவில் மீறப்பட்டுள்ளன. உண் க்கு புறம்பாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.



    உண்மையில் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஓராண்டாக கவர்னர் மாளிகைக்கு வந்ததே இல்லை. அவர் கவர்னரையோ அல்லது கவர்னரின் செயலாளரையோ அல்லது கவர்னர் மாளிகை அதிகாரிகளையோ சந்தித்ததே கிடையாது.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடந்தது. அந்த விழாவுக்கு கவர்னர் அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது கூட கவர்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் தங்கவில்லை.

    கவர்னருடன் சென்றிருந்த அவரது செயலாளரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு செல்லவில்லை. ஆனால் இந்த உண்மையை எல்லாம் மறைத்து மிகுந்த வெறுப்பு உணர்வுடன் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

    வடிகட்டிய பொய்யான தகவல்களை கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையை கண்டு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. இத்தகைய பத்திரிகைக்கு உண்மையை அறியாத சில மதிப்புமிக்கவர்கள் ஆதரவு கொடுத்தது வேதனையானது.

    சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய பாரதி, வ.உ.சிதம்பரனார், தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், பாரத ரத்னா விருது பெற்ற எம்.ஜி.ஆர், அப்துல்கலாம் போன்ற தலைவர்கள் தங்களது சிந்தனையால், செயலால், பேச்சால், எழுத்தால் நிறைய சேவை செய்து இம்மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    கவர்னர் மாளிகைக்கு அபரிமிதமான அதிகாரங்கள் இருந்தாலும் கூட இதுவரை எந்த நடவடிக்கையையும் யார் மீதும் எடுத்தது இல்லை. தொடர்ச்சியான அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எழுதி காயப்படுத்தியதால் தற்போது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஜனநாயக நாட்டில் கருத்துக்கள் ஆரோக்கியமான முறையில் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் அந்த கருத்துக்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ கவர்னரை அச்சுறுத்தும் வகையில் அமைந்தால் அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள இயலாது.

    கவர்னர் மாளிகையின் மாண்பை சீர்குலைப்பவர்கள் முன்பு ஒருபோதும் கவர்னர் மாளிகை அடிபணியாது.

    இவ்வாறு கவர்னர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #NakkeeranGopal #NirmalaDevi #BanwarilalPurohit
    ×